Thursday, December 27, 2007

The little Mermaid


----------------------------------------
இயக்கம் : Ron Clements,John Musker
இசை : Alan Menken
தயாரிப்பு : Walt Disney
வருடம் : 1989
----------------------------------------


ஒரு முறை கடலுக்கு மீன்பிடிக்க வரும் இளவரசன் எரிக் கடலில் தவறி விழுந்துவிட அவனைக் காப்பாற்றுகிறாள் கடற்கன்னியான ஏரியல், கடல் தேசத்தின் இளவரசி. வேறு என்ன.?ஏரியலுக்கு எரிக் மீது காதல் வருகிறது. ஒரு கடற்கன்னியால் ஒரு மனிதனை எப்படி மணக்க முடியும்? இவள் எண்ணத்தை அறிந்து, கடல் ராஜ்ஜியத்தை அடையத்துடிக்கும் சூனியக்காரி ஒருத்தி, ஏரியலை மனிதப் பெண்ணாக மாற்றுவதாக வஞ்சித்து கடல் ராஜ்ஜியத்தை கைப்பற்றுகிறாள். இவை அனைத்தையும் கடந்து காதல் எப்படி கைகூடுகிறது என்பதை கலர்புல்லாகச் சொல்லும் படம்தான் The Little Mermaid. அனிமேஷன் படங்களுக்கே உரித்தான குண்டு கண்களுடன் விழித்து விழித்து பாரக்கும் நாயகி, நாயகியுடன் ஒரு தோழி, ஆஜானுபாகுவான ஹீரோ, மந்திர தந்திரங்கள் தெரிந்த வில்லன், அங்கங்கே high pitch ல் பாடல்கள், comedy செய்யும் சிறு விலங்குகள் என அனைத்தும் இருந்தும் Something missing. திரைக்கதையிலும், Creativity லும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். ஆனாலும் இப்படம் ஒரு Box office hit. ஏறக்குறைய 100 மில்லியன் டாலர் என வசூலில் சாதனை படைத்தது.

Wednesday, December 26, 2007

ஓரம் போ..!


------------------------------------
இயக்கம் : புஷ்கர் & காயத்ரி
இசை : G.V. பிரகாஷ்
வருடம் : 2007
நடிப்பு : ஆர்யா, பூஜா
------------------------------------

சென்னையில் ஆட்டோ ரேசிங் நடக்கிறது என்ற ஒரு வரியை நன்றாக மசாலா தேய்த்து பரபரப்பாய் தந்திருக்கின்றனர் புஷ்கரும் காயத்ரியும். கதாநாயகன் ரேசிங்கில் ராஜா.. அவ்வப்போது ஒரு ரேஸ் இடையிடையே கதாநாயகியுடன் காதல் இடையில் ஒரு வில்லன் என டிபிகல் கதை. படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயங்கள் மூன்று. ஒன்று ஆண்டனியின் படத்தொகுப்பு, அனேக இடங்களில் அட போட வைக்கிறது.. இரண்டாவது Son of Gun, படம் முடிந்த பின்னும் கதாநாயகனை விட இவர்தான் நினைவில் நிற்கிறார்.. பிகிள், சன் ஆப் கன், சப்ளை, ராணி என படம் முழுதும் வியாபித்திருக்கும் பாத்திரங்கள்.. நம்மூர் லெவலுக்கு ஒரு Fast and Furious பாத்த மாதிரி ஒரு உணர்வு. தமிழ் சினிமாவுக்கு கொஞ்சம் புதுசா தர முயற்சி பண்ணியிருக்காங்க. பாக்கலாம்...!

Black



-----------------------------------------------------
எழுத்து : சஞ்சய் லீலா பன்சாலி
இயக்கம் : சஞ்சய் லீலா பன்சாலி
தயாரிப்பு : சஞ்சய் லீலா பன்சாலி
இசை : Monty
நடிப்பு : அமிதாப் பச்சன், ராணி முகர்ஜி
வருடம் : 2005
------------------------------------------------------
ஹெலன் கெல்லரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதை. Michelle McNally தான் கதையின் நாயகி இங்கு. எல்லோரும் போலத்தான் வாழ்வு தொடங்குகிறது அவளுக்கும். ஆனால் திடுதிப்பென்று 18 வது மாதத்தில் ஒரு நாள், கேட்கும் சக்தியும் பார்வையும் பறிபோக, அதன்பின் அவள் வாழ்வின் வெறுமையை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது இப்படம்.


கேட்கும் சக்தியும் பார்வையும் பறிபோனால், உலகம் எப்படி இருக்கும். நினைத்துப்பார்க்கவே முடியாத வெறுமை அது.. சிந்திக்கக் கூட முடியாத நிலை அது. எப்படி சிந்தனை உருவாகும். எந்த மொழியில்? திரும்பும் திசையெங்கும் எதுவுமே இல்லாத வெறுமை அது. இதனால் யாருக்கும் அடங்காத ஒரு முரட்டுக் குழந்தையாக வளர்கிறாள் Michelle.


அப்போதுதான் வருகிறார் அமிதாப்.


அமிதாப்புக்கு ரொம்ப அழகான ஒரு கேரக்டர். ஒரு குடிகார டீச்சர், தீப்ராஜ் சகாய். Michelle ஐ திருத்தும் பொறுப்பு அவருடையது. சுற்றி நின்று விழுங்கத் துடிக்கும் இருளிலிருந்து அவளை ஒளியை நோக்கி அழைத்துச் செல்கிறார். சிந்திக்கக் கற்றுக் கொடுக்கிறார். அவளைச் சுற்றியிருக்கும் ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயர் இருக்கிறதென தெளிய வைக்கிறார்.


அவளைக் சாதாரண மாணவர்கள் படிக்கும் பல்கலைக்கழகத்தில் சேர்த்து பட்டம் பெற வைக்க வேண்டும் என்பதே அமிதாப்பின் கனவு. ஆனால் கனவு நிறைவேறும் முன் அமிதாப்புக்கு ஒரு வியாதியில் அனைத்தும் மறந்து போக, துடைத்து வைத்த கரும்பலகையாகிறது அவர் மனம். தன் பெயர் கூட தனக்கு நினைவில்லாத நிலையில் காணாமல் போகிறார் அமிதாப்..


அதன் பின் தொடர்ந்து படிக்கும் Michelle 3 வருடத்தி்ல் முடிக்க வேண்டிய பட்டப்படிப்பை 20 ஆண்டுகள் போராடி முடிக்கிறார். 18 ஆண்டுகள் கழிந்து பின் மீண்டும் கிடைக்கிறார் தீப்ராஜ் சகாய்.அமிதாப் இனி மீள்வதெற்கு வழியே இல்லைனெ அனைவரும் கைவிரித்து விட Michelley தன்னால் முடியுமென்று, தனக்கு அவர் கற்பித்தவற்றை மீண்டும் அவருக்குக் கற்பிக்கத் தொடங்குகிறாள்..


வாழ்க்கை ஒரு சக்கரமென படம் முடிவடைகிறது..


படத்தில் ஒரு பாடல் கூட கிடையாது. படம் முழுவதுமாக ஒரு கவிதையைப் போல செல்கிறது. பிண்ணனி இசையும் ஒளிப்பதிவும் படம் முழுக்க ஒரு ஹாலிவுட் தனத்தை தந்து நிச்சயம் ஒரு காட்சியிலாவது கண்கலங்கவைத்து விடுகிறன. குழந்தையாக வரும் Michelle ன் நடிப்பு அபாரம். நடக்கும் விதத்தி்ல் தொடங்கி முகத்தில் காட்டும் உணர்ச்சிகள் வரை, இது நிழல் எனநம்ப முடியவில்லை. ஒரு காட்சியில் சிரிப்பது கூட எப்படி எனத் தெரியாமல் சிரிக்கும் காட்சி Fantastic. எப்படி ஒரு குழந்தையை இந்தளவுக்கு நடிக்க வைக்க முடியும்.. வியக்காமல் இருக்க முடியவில்லை. அதே போன்று ராணியின் நடிப்பும்.


முதன் முதலில் ஒரு குழந்தை எப்படி கற்றுக்கொள்கிறது. இது தண்ணீர் என்று புரிய வைக்க, முதலில் அதன் பார்வையில் தண்ணீர் இருக்க வேண்டும். மனதில் தண்ணீரின் முதல் பிம்பம் பதியவைக்கப்படவேண்டும். பின் அதுதான் தண்ணீர் என்றால் தண்ணீர் என்ற பெயரை மனதில் பதியவைத்து, அதனை முதலில் பதியவைக்கப் பட்ட பிம்பத்துடன் தொடர்புபடுத்த வேண்டும்.. இல்லையா.?
இவை எதுவுமே இல்லாமல், வெறும் உணர்ச்சிகளின் மூலம் தீப்ராஜ் தண்ணீரை விளக்கும் காட்சி வார்த்தைக்கு அடங்காதது. Michelle க்கு முதன் முதலில் தண்ணீர் என்பதை கற்றுக்கொண்டவுடன் ஏற்படும் ஆனந்தம், நம்மையும் தொற்றிக்கொள்ளும்.


You can never miss அப்டீனு சொல்வாங்கல்ல.. அந்த மாதிரி ஒரு படம்...


2005 ம் ஆண்டில் 11 Filmfare விருதுகளை அள்ளியது இப்படம்.( இது வரை இச்சாதனை முறியடிக்கப்படவில்லை)
-----------------------
இனிமேல் நான் பார்க்கும் அனைத்து படங்களைப் பற்றியும் கொஞ்சமாக எழுதலாம் என்று நினைத்துதான் எழுதத் தொடங்கினேன். ஆனால் இப்படத்திற்கு இதைவிட சின்னதாக எழுதமுடியவில்லை. இன்னும் நிறைய எழுதணும்னு தோணுது. ரொம்ப போராயிடுமோன்னும் ஒரு எண்ணம். அதனால இனிமே ஒவ்வொரு படத்துக்கும் சுருக்கமா ஒரு சிறுகுறிப்பு வரைய முயற்சிக்கிறேன்.