Wednesday, January 23, 2008

பீமா


------------------------------------
இயக்கம் : லிங்குசாமி
நடிப்பு : விக்ரம், பிரகாஷ்ராஜ்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வருடம் : 2008
------------------------------------

கத்தியெடுத்தவனுக்கு கத்தியால்தான் மரணம் எனும் பழமொழியை எக்கச்சக்க ரத்தத்தோடும் சத்தத்தோடும் சொல்லும் படம்தான் பீமா.


படம் ஆரம்பிச்சதிலிருந்து முடியற வரை படபட படபடன்னு ஆளாளுக்கு சுட்டுகிட்டே இருக்காங்க. சும்மா பீச்ல போய் சுண்டல் வாங்கற மாதிரி, போய் ஒருத்தர சுட்டுட்டு ஆளாளுக்கு திரும்பிபோறாங்க. இளம் வயதில் ராமேஸ்வரத்தில் வாழும் குட்டி விக்ரம் அப்பகுதியில் இருக்கும் ரெளடியான பிராகாஷ்ராஜால்( of course.. நல்லது செய்யற ரெளடிதான்) கவரப்பட்டு தானும் பிற்காலத்தில் ரெளடியாகனும்னு முடிவுபண்றார்.. பிற்காலத்தில் அப்படியே சேர்ந்திடவும் செய்யறார்.. அதுக்கப்புறம் என்ன.. ரகளைதான்.. சும்மா சுத்தி சுத்தி சண்டை போடறார்.. கிளைமாக்சுக்காக போலீசும் வருது.. எல்லாருமா சேந்து செத்துப்போறாங்க.. கடைசியில் ஒரு பன்ச் வேறு.. "ஆயுதத்துக்கு நல்லவன் கெட்டவனெல்லாம் தெரியாது. உபயோகிக்கப் படுபவன் மீது அது தன் குணத்தைக் காட்டும்.. அவ்வளவே.. " எப்படி இருக்கு? இதுதாங்க பீமா..


ஆனாலும் விக்ரம் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார்.. தனக்குக் கொடுக்கப் பட்ட கதாபாத்திரமாக மாற ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். முதல்காட்சியிலேயே அவரின் உழைப்பு தெரிகிறது.. ஆனால் இந்த படத்திற்கு இவ்ளோ கஷ்டப்பட்டிருக்க வேண்டாம்.. பாட்டுக்கு மட்டும் வந்து போறாங்க திரிஷா. (ஒரு பாட்டைத்தவிர மத்த எல்லா பாட்டுமே டூயட்தான்) . சண்டைக்காட்சிகள் உண்மையிலேயே ரொம்ப நல்லா எடுத்திருக்காங்க. குறிப்பாக சண்டைக்காட்சிகளின் ஒளிப்பதிவு அருமை.. ஒரு மாதிரி ஹாலிவுட்தனமா தெரிஞ்சுது.. (Thanks to RD Rajasekar).


எல்லாம் சரி.. எங்கே போய்கிட்டு இருக்கு தமிழ் சினிமா? கதாநாயகன் தன்னெதிரில் வரும் பத்து பதினைந்து பேரை குருவி சுடுகிற மாதிரி சுட்டுகிட்டே முன்னேறுவதை, தியேட்டரில் என்அருகிலிருந்த ஒரு சிறுவன் பாப்கார்ன் கொறித்துக்கொண்டே ரசிக்கிறான். அந்த பிஞ்சு மனதில் பதிவது என்ன..? போன மாசம் செய்தித்தாளில் படித்த ஒரு செய்திதான் நினைவுக்கு வந்தது. மத்தியபிரதேசத்தில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவன், ஒரு சின்ன ஜியாமண்டரி பாக்ஸ் தகறாரில் சக மாணவன் ஒருவனை துப்பாக்கியால் சுட்டதில் அந்த மாணவன் மரணமடைந்திருக்கிறான்.. இனிமேலாவது யோசிக்க வேண்டாமா..?

Wednesday, January 16, 2008

Night at the Museum


------------------------------------
இயக்கம் : Shawn Levy
நடிப்பு : Ben Stiller, Robin Williams
மொழி : ஆங்கிலம்
வருடம் : 2006
------------------------------------
1993 ம் ஆண்டு Milan Tranc எழுதிய குழந்தைகளுக்கான புத்தகம்தான் Night At the Museum. அதனைத் தழுவி எடுக்கப்பட்டதே இத்திரைப்படம். பெயரே கதை சொல்கிறது. ஊரே உறங்கும் இரவில் அருங்காட்சியகத்தினுள் நிகழும் அதிசயங்கள்தான் கதை.

நம்ம ஹீரோ அந்த அருங்காட்சியகத்தில் night watchman ஆக வேலைக்குச் சேருகிறார். வேலையின் முதல் நாள். இரவில் கண்விழித்துப் பழக்கப்டாத ஹீரோ உறங்கிவிடுகிறார். நள்ளிரவில் கண்விழித்துப் பார்க்கும் போது, அருங்காட்சியகத்தில் இருந்த டைனோசர் எலும்புக் கூட்டை அதன் இடத்தில் காணவில்லை. பதற்றத்துடன், அருங்காட்சியகத்தின் உள்ளே செல்கிறார். அங்குதான் காத்திருக்கிறது அதிர்ச்சி. Ben Stiller தேடிச்செல்லும் அந்த டைனோசர் எலும்புக்கூடு ஒரு water tape ல் நீர் அருந்திக் கொண்டிருக்கிறது. அதனைப் பார்த்து ஹீரோ அலற, ஹீரோவை டைனோசர் துரத்த, அப்போதுதான் ஒரு உண்மைதெரியவருகிறது. அது.. அந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் அனைத்தும் இரவு நேரத்தில் உயிர்பெற்று உலவுகின்றன.டைனோசர் மட்டுமல்ல. அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட், சிங்கம்,புலி, சிம்பன்சி குரங்கு,வரிக்குதிரை, ஆப்ரிக்க யானை, கற்கால மனிதற்கள், Cow boys, ரோமப் பேரரசர் ஆக்டேவியஸ் என ஒரு சர்ரியலிஸக் கலைவையே உயிர் பெறுகிறது. ஆனால் அனைவரும் பகலவனின் உதயத்தில் சிலையாய்உறைகின்றனர். இதற்கெல்லாம் காரணம் அங்கிருக்கும் ஒரு எகிப்திய மம்மியும் அதன் Tablets எனப்படும் ஒரு மந்திரப்பலகையும்தான்.

ஒரு சுவாரஸ்யமான கதைக்கு இந்த கதைக்களம் போதாதா..? இடையில் ஒரு வில்லன் Group. அருங்காட்சியகத்தைத் திருட எத்தனிக்கிறது. அதனை Ben Stiller அருங்காட்சியகத்தின் காட்சிப்பொருள்கள்(!) அனைவரின் உதவியோடு எப்படி முறியடிக்கிறார் என்பதை கிராபிக்ஸ் கலக்கலோடுவயிறு குலுங்கச் சொல்லும் கதைதான் Night At the Museum.

படத்தில் அத்தனை ஜனரஞ்சக விஷயங்களுக்கும் உத்தரவாதம் உண்டு. காதல், சோகம், வீரம், விபரீதம், நகைச்சுவை, ஏமாற்றம் என அத்தனையும் உண்டு. Robin Williams வழக்கம் போல் ரூஸ்வெல்ட்டாக பின்னியெடுத்திருக்கிறார்.
குடும்பத்துடன் கண்டுகளிக்க சிறந்த படம்.

உபதகவல்: (இப்படத்தைக் காண விரும்புபவர்களுக்கு)வருகிற 26ம் தேதியன்று (26th Jan 2008) Star Movies பாருங்க.

Friday, January 4, 2008

கல்லூரி

------------------------------------------------
இயக்கம் : பாலாஜி சக்திவேல்
தயாரிப்பு: ஷங்கர்
நடிப்பு : புதுமுகங்கள்
இசை : ஜோஸ்வா sriதர்
------------------------------------------------
பல கனவுகள் தரும் கல்லூரியில் கருகிய சில மலர்களின் கதை இந்த கல்லூரி. நாம் பெரும்பாலும் பார்த்துப் பழகாத கல்லூரியை கண்முன் நிறுத்துகிறார் இயக்குனர். இயல்பான கதாபாத்திரங்கள்.. நாயகன் நாயகியைத் தாண்டி விரிகின்றனர். குறிப்பாக கயல்விழி கதாபாத்திரம். முன்பாதியில் வரும் அரட்டை அரங்கம் தேவையில்லாத திணிப்பு. இசை நன்று, சில இடங்களில் காதல் சாயல். முத்துக்குமார் பளிச்சிடுகிறார். எல்லாம் சரி.. Climax தான்.. கொஞ்சம் ஒட்டாமல் நிற்கிறது.. திடுதிப்னு ஒரு Climax..அது ஏற்படுத்த வேண்டிய தாக்கம் ஏற்படாமல் ஏமாற்றமே மிஞ்சி நிற்கிறது.